5/18/2009

புலி சாகும் அலுவலக நாளொன்றில் News alert கள் வருகின்றன

ஒவ்வொரு செல்பேசிச் செய்திச்சிணுங்களைஅடுத்தும் கொட்டுகிறது கைதட்டல் மழை
சிரிப்பின் இடி
எம்மீது விழும் ஓரப்பார்வையின் குரூரமின்னல்

மின்னஞ்சல்களாகவும் Instant Messenger களின் ஒற்றை வரிகளூடாகவும் நண்பர்கள் கண்ணீர் தெறிக்கிறது.

செல்பேசிகளின், இணையத்தொடர்புகளின் முகவரிப்புத்தகங்களில் தமிழ்ப்பெயர்களைத்தேடி அலைகிறது
வெடிக்காமல் பொத்திவச்ச விம்மும் மனசு.

ஒட்டுக்கேட்கப்படக்கூடிய தொலைப்பேச்சுக்களின்
திக்கித்திணறிய குறியீட்டு வார்த்தைகளாயும் இடைவெளிகளாயும்
வெடித்து உடைந்து நொறுங்கிச்சரிகின்றது.

அலுவலகத்தின் பெரும்பான்மை ஆர்ப்பரிக்கிறது.


இல்லாத வேலைகளை எல்லாம் எடுத்துப்போட்டு "பிசி"யாகிக்கொள்ளும் நண்பர்களின் கண்கள்
இதன்வழி புகுந்து நரகத்திற்காவது தப்பிவிடலாமா என்று கணினித்திரைகளை வெறித்தபடிப் பார்க்கின்றன.

கண்ணீர்ச்சுரப்பிகள் இறுகி இறுகி கண்ணீரை அடக்கும்
முகத்தசைகள் முறுகி இறுகி அழுகையை அடக்கும்
இதயமும் உடலும் நரம்புகளும் குறுகிக் குறுகி
குறுகிக் குறுகிக்
கூசித் தளரும்

மூளை சுடரும்
சுடரும்


புன்னகைப்பதை விட கடினமான செயல் இந்த உலகில் வேறென்ன இருக்க முடியும்?

கொடி கட்டவும் பாற்சோறு பொங்கவும் காசுகேட்கும் முகங்களிலும் கரங்களிலும் வார்தைகளிலும் குழைவிலும் "எங்களை விடுவித்த" உங்கள் வெற்றிச் சிரிப்பிலும்
நான் என்னை "உங்களிடமிருந்து" விடுவித்து பிரித்தெடுத்து தனித்துப்போகிறேன்.
முகவரிப்புத்தகங்களில் தமிழ்ப்பெயர்களைத் தேடுகிறேன்.

விறைத்து எழுந்து வீசி ஆடும் உங்கள் சிங்கக்கொடி,
இன்று நான் உங்கள் முன் உரத்துப் பேச வேண்டிய வார்த்தைகளின்
உரப்பினைப் பீரங்கிகள் கொண்டும்,
சொற்களை குதத்தினுள் புகும் முள்ளுக்கம்பிகளைக்கொண்டும்,
குரலினை என் சனத்தைக்கொன்றும்
பிடுங்கிக்கொண்டது.

இப்போது அந்தக்கொடியின் நகல்களை அசையாதிருக்கும் என்முன்னே வீசி ஆட்டுகிறீர்கள்..
விசிலடித்து ஆடுகிறீர்கள்..


செத்துப்போன புலி ஒரு நீண்ட வார இறுதி விடுமுறையாய்ப்பார்த்து செத்திருக்கலாம்.

7 comments:

தமிழ்நதி said...

உங்கள் வேதனை புரிகிறது. நீங்கள் இருக்கும் இடத்தில் எவ்வளவு இழிவையும் தலைகுனிவையும் உணர்ந்துகொண்டிருப்பீர்கள். நாங்கள் அநாதைகளாக்கப்பட்டுவிட்டோமா... செய்திகளுக்காகக் காத்திருக்கிறோம்.

ஜனகன் ஞானேந்திரன் said...

நன்றி தமிழ்நதி.

வலைப்பதிவுக்குப் புதுசானாலும் நானுங்கள் நீண்டகால இணையவாசகன்.

பார்க்கலாம். சாவீட்டு அழுகைகளை நிறுத்திக்கொண்டு அடுத்தடுத்த கட்ட அரசியல் வேலைத்திட்டங்களை நோக்கி முன்னேற வேண்டும்.

சுந்தரவடிவேல் said...

//சாவீட்டு அழுகைகளை நிறுத்திக்கொண்டு அடுத்தடுத்த கட்ட அரசியல் வேலைத்திட்டங்களை நோக்கி முன்னேற வேண்டும்.//
ஆம்.

Iniyan said...

Aaruthal solvathai thavira enakku veru theriyavillai nanbare! Naan India-vil piranthathargaha vetkapadugiren......

superlinks said...

vaNakkam ungkalukku inaippu kotuththulleen
paarungkaL.

Anonymous said...

Brother,

Don't worry.. Our days will come to hit back soon.

Anonymous said...

கொடி கட்டவும் பாற்சோறு பொங்கவும் காசுகேட்கும் முகங்களிலும் கரங்களிலும் வார்தைகளிலும் குழைவிலும் "எங்களை விடுவித்த" உங்கள் வெற்றிச் சிரிப்பிலும்
நான் என்னை "உங்களிடமிருந்து" விடுவித்து பிரித்தெடுத்து தனித்துப்போகிறேன்.
முகவரிப்புத்தகங்களில் தமிழ்ப்பெயர்களைத் தேடுகிறேன்.

Every one working with majority face these; even worser sometimes. Questions like "are you sad" why don't you join us? sharing "kavum" My reply is "I am fasting; sorry"

Post a Comment