5/22/2009

ஈழத்தின் அரசியல் எழுச்சியை தட்டித் தடவி தமக்கேற்றபடித் திருப்பும் அதிகாரங்களின் கலை

கச்சிதமாய்த் திட்டமிட்டு, கால அட்டவணை பிசகாமல், நேர்த்தியாகவும் சிறப்பாகவும் புலிகளைத் தோற்கடித்து அழித்து முடித்துள்ளார்கள்.

அழித்து முடித்தவர்கள் யார்?

மாற்றுக்கருத்தாளர்களா?
சிறீலங்கா அரசா?
இந்தியாவா?
சீனாவா?

யார் அழித்தவர்கள்?

இலங்கையிலும் உலகத்திலும் எவருடைய நலன்களுக்கு எல்லாம் புலிகள் தடையாக அமைந்தார்களோ , அந்த அத்தனை அதிகாரம் படைத்த சக்திகளும் ஓரணியில் சேர்ந்துதான் இந்த அழித்தொழிப்பை நடத்தியிருக்கிறார்கள்.

புலிகளுக்குச் சார்பாக எந்தச்சக்திகளும் இல்லாமற்போனது புலிகளின் இயல்பு, இன்றைய உலக அரசியற் சூழல் போன்றவை வழிவந்த துரதிஷ்டம். முன்பெல்லாம் இந்தியா போன்ற சக்திகள் புலிகளை ஆதரித்து தமது கைப்பாவையாக நடத்தியுள்ளன. பிறகு இக்கட்டான முட்டுச்சந்துகளுக்குள்ளிருந்து வெவ்வேறு சக்திகள் புலிகளைக் காப்பாற்றி விட்டிருந்தன. ஆனால் இந்தமுறை அப்படி எதுவும் நடக்காமற்போய்விட்டது.

ஏன் அப்படி நடக்காமற்போனதென்று தகவலாழம் மிக்க ஆய்வாளர்கள் ஆய்ந்து சொல்லட்டும்.

இந்த அழித்தொழிப்பில் அநியாயமாய், இரண்டுதரப்பாலும் "பயன்படுத்தப்பட்டு" கொத்துக்கொத்தாகச் சாகவிடப்பட்டவர்கள் வன்னிச்சனங்களே.

இந்த நிகழ்காலத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஈழத்தமிழர் ஆதரவு சக்திகளுக்கும் அவரவர் மனங்களில் இருந்த ஆலமரமொன்று அதிரவிழுந்திருக்கிறது.

இது ஈழத்தமிழ்ச்சக்திகளை அரசியல் ரீதியாக எழுச்சிகொள்ளச்செய்திருக்கிறது. அரசியலுணர்வு பெறத் தூண்டியிருக்கிறது.

அரசியல் அக்கறை அற்றவர்களைக் கூடச் செய்திகளைத்தேடவும், வீதிக்கு இறங்கவும், அரசியல் பேசவும், அரசியலில் ஈடுபாடு காட்டவும் தள்ளியிருக்கிறது.

அவலத்தின் கண்ணீரில், அழிவின் அதிர்ச்சியில் விளைந்த ஓர் ஆக்கம் இது. இது எல்லா நேரமும் நடந்து விட முடியாத ஒரு நல்ல விசயம்.

இந்த அரசியல் எழுச்சி ஈழ மண்ணில் மனங்களில் குமுறிக்கொண்டு, தமிழகத்தில் கண்ணீரையும் கோபத்தையும் கனன்றுகொண்டு, புகலிடமெங்கும் வீதிகளை நிறைத்துக்கொண்டு வெள்ளமாய் கரைபுரண்டு பொங்கிப்பாய்கிறது.

இது வல்லரசுகளுக்கும், நயவஞ்சக அதிகரங்களுக்கும் சிக்கலான நிலமையே.

மக்கள் அரசியலறிவு பெறக்கூடாது என்பதிலும், மக்களை அரசியல் நீக்கம் பெற்றவர்களாக, சினிமாவையும் கிரிக்கட்டையும் தேர்தல் போட்டிகள் பற்றிய செய்திகளையும் மட்டுமே கதைப்பவர்களாக வைத்திருக்க வேண்டும் என்பதிலும், தாம் நினைப்பதுபடியெல்லாம் மக்கள் ஆடவேண்டும் என்பதிலும், தாம் கொறிக்கக்கொடுப்பதையே மக்கள் தமது அரசியலாக கடித்துத்திரியவேண்டும் என்பதிலும் கண்ணில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு கவனமாக இருக்கும் அதிகாரங்களுக்கு இந்த எழுச்சி நிச்சயமாக அச்சுறுத்தலானதே.

ஆனால்,

நாங்கள் நினைப்பதை விட அதிகாரங்களும், வல்லரசுகளும் சக்தி வாய்ந்தவை. அறிவு மிக்கவை. தமக்கிடையே கச்சிதமாகக் கூடிப்பணியற்றக்கூடியவை. நினைத்துப்பார்க்கமுடியாத வேகம் கொண்டவை.

புலிகளின் அழிவில், அந்த அதிகாரங்களின் வேகத்தையும் விவேகத்தையும் கூட்டுழைப்பையும், தூரநோக்கையும் நாங்கள் கொஞ்சமாவது பார்த்தறியமுடியும்.

அதிகாரங்களை எவ்வளவுக்கெவ்வளவு நாம் குறைத்து மட்டுக்கட்டுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நாம் அவற்றினிடத்தில் தோற்றழிந்து போவோம்.


எமதிந்த அரசியல் கொதிப்பையும் எழுச்சியையும் எதிர்கொள்ளவும் கையாளவும் தோற்கடிக்கவும் தொலைத்துவிடவும் அதிகாரங்கள் எப்பவோ வழிவகைகளைக் கண்டறிந்துவிட்டன என்பதை மட்டும் நன்றாக நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.

எம்மைத்தோற்கடிப்பதற்கான அதிகாரத்தின் ஒவ்வொரு அசைவையும் மிக நுணுக்கமாக நாம் அவதானித்து அம்பலப்படுத்த வேண்டும். இதற்கு கண்ணிரண்டும் செவியும் அகலத்திறந்த அவதானம் தேவை, கூர்மதியோடு பகுத்தாராயும் நுண்ணறிவு தேவை. இது ஆய்வாளர்களுக்கும் புலமையாளர்களுக்கும், அரசியல் அவதானிகளுக்கும் முன்னால் வந்து சேர்ந்திருக்கும் மாபெரும் களப்பணி.


என்னுடைய சிற்றறிவுக்கெட்டிய வரை அதிகாரங்களின் உத்தி ஒன்றினை உங்களுடன் பகிர நினைத்தே இப்பதிவினை எழுதுகிறேன்.

ஜூடோ என்றொரு தற்காப்புக்கலை இருக்கிறது. அதன் அடிப்படை, தாக்கவரும் எதிரியின் வேகத்தையும், சக்தியையும், தாக்குதல் வல்லமையையும் கொண்டே அவ்வெதிரியை வீழ்த்திவிடுவது என்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதாவது எவ்வளவு சக்தியோடு நீங்கள் தாக்கப்போனீர்களோ, அந்தச்சக்தி திசைமாற்றப்படுவதன்மூலம், அதே சக்தியின் விளைவாகவே நீங்கள் தாக்கப்படுவீர்கள். உங்கள் எதிரிக்கு எந்த இழப்பும் இல்லை. மெல்லத்தட்டி உங்கள் சக்தியை உங்களுக்கெதிராக திருப்பி விட்டது மட்டுமே அவர் வேலை.

இதே உத்தியை எமது அரசியல் எழுச்சியை நோக்கியும் அதிகாரங்கள் பயன்படுத்தத்தொடங்கிவிட்டன என்பது வெட்ட வெளிச்சமாகத்தெரிய ஆரம்பிக்கிறது.
(முன்னரும் இதையேதான் செய்தன. அதுபற்றி வேறெப்போதாவது பேசலாம்)

தம்மை நோக்கிக்குரைக்கும் நாயை நிலவை நோக்கியும் மரத்தை நோக்கியும் நிழலை நோக்கியும் குரைக்க வைத்துவிட்டால் இப்போதைக்குப் போதுமானதே.

நம்மில் பலர் நிலவைப்பார்த்தும், மரத்தைப்பார்த்தும், நிழலைப்பார்த்தும் குரைக்க ஆரம்பித்துவிட்டோம்.

இவ்வாறாக திசைமாற்றப்பட்ட போர்க்கொதிப்பிற்கு எடுத்துக்காட்டாக நானறிந்த சம்பவங்களைத் தருகிறேன்:


1. தமிழர்கள் "சிங்கள வெறியர்களாலும்" மகிந்த சகோதரர்களாலும் கொல்லப்படுவதாக எமது அரசியற்பார்வை குறுக்கப்பட்டு ஏகாதிபத்தியங்களிடம் முறையிடுபவர்களாக நாம் மாற்றப்பட்டமை.

2. இந்திய காங்கிரஸ் அரசாங்கமே இதற்குக்காரணம் என்றும், சோனியாவின் காழ்ப்புணர்வே இங்கே வெறியாடுகிறதென்றும் நம்பவைக்கப்பட்டமை.

3. கருணாநிதி துரோகம் செய்யாதிருந்தால் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்று அங்கலாய்த்தமை.

4. இதன்வழி ஜெயலலிதாவையும், BJP ஐயும் ஆதரிக்கும் நிலைக்கு நயவஞ்சகமாக தள்ளப்பட்டமை.

5. மேற்கு நாடுகளின் அரசாங்கங்களிடம் கையேந்தி அவற்றுக்கு சிறீலங்காவின் "படுகொலைகளை" படம் காட்டி மாற்றங்களை உருவாக்கலாம் என்று நம்பவைக்கப்பட்டமை.

6. பாரிய மக்கள் எழுச்சியை, புலிகளைக் காப்பதற்கான, பிரபாகரனை வழிபடுவதற்கான போராட்டமாகக்குறுக்கி திசைமாற்றியமை.

7. முத்துக்குமாரன் நண்பர்கள் அமைப்புப் போன்றவற்றால் புத்திசாலித்தனமாக ஏமாற்றப்பட்டு, சீனப்பூச்சாண்டியை அளவுக்கதிகமாக நம்பி, இந்திய உளவுத்துறையை அறியாமல் தவறு செய்யும் பிள்ளையாகவும் சோனியாவை தவறான வழிகாட்டும் அம்மாவாகவும் நம்பி, காங்கிரசை அகற்றினால் எல்லாம் சரி என்றவாறாக நினைத்து இந்திய நலன்களுக்குச் சார்பாக கோசமிடவைக்கப்பட்டமை.

8. ஐ நா வில் சீனாவும் ரஷ்யாவும் எதிராய் இருப்பதால் தான் அமெரிக்க பிரிட்டன் கொண்டுவர நினைக்கும் "தீர்ப்புநாள்" கைதவறிப்போவதாய் நினைத்துக்கொள்கின்றமை. இதில் மேற்குக்குச்சார்பான ஜப்பான் ஏன் மேற்குக்கு எதிர்நிலை எடுக்கிறது என்று சிந்திக்க மறுகின்றமை.

9. எதுவும் செய்ய வழியில்லாத முட்டுச்சந்தில் முடக்கபப்ட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை வேகமாக வடிவமைக்க வேண்டிய நேரத்தில் பிரபாகரன் செத்திட்டானா தப்பிட்டனா எனும் அங்கலாய்ப்பிலேயே காலம் கடத்துகின்றமை.



இன்னும் நீளும் இந்தப்பட்டியலின் ஒவ்வொரு சம்பவமும் ஏகாதிபத்திய உளவு நிறுவனங்களாலும், இந்தியா உள்ளிட்ட வல்லரசுகளின் கூலிகளாலும், இலங்கை அரசாலும், புலிகளாலுமே நடத்திவைக்கப்பட்டன.

இனியும் எமது எழுச்சி இதே சக்திகளால் நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் திசைமாற்றப்பட்டவண்ணமே இருக்கும்.


நாம் என்னதான் செய்யமுடியும்?

களப்பணிகளுடன் புலமை உழைப்பு மிக மிக அவசரமாய்த் தேவைப்படுகிறது.

சதிகளை கண்டுபிடிக்கவும், மாயவலைகளை அறுக்கும் அறிவுக்கூர்மையை தீட்டிவைத்துக்கொள்ளவும் நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

எமக்கு முன்னால் இப்போது இலக்கற்ற சூனியம் விரிந்திருக்கிறது. காலடி எடுத்து வைக்க முடியாதபடி எமது இருண்டபாதைகள் எங்கும் சுற்றிவரக் கண்ணிவெடிகள். அரசியற் பொறிகள்.
திசையறியோம், வகையறியோம், நினைத்துப்பார்க்கமுடியாத பிரமாண்டங்களாக எதிரிப்பிசாசுகள் சூழ்ந்து விட்ட இருண்ட நிலை இது.

கூர்மதியோடும், நேர்மையோடும் சதிவலைகளை மெல்ல மெல்ல அவிழ்த்து எமக்கான பாதையைக் கண்டறிய வேண்டிய நேரம் இது.

இவற்றை உணர்ந்து எங்கள் எழுச்சியைத் தட்டித்தடவி எமக்கெதிராக மாற்றும்; எங்கள் வீரியத்தை வீணான கவனங்களில் சிதறடிக்கும் முயற்சிகளுக்கு இடம் கொடாதிருப்போம்.

6 comments:

Anonymous said...

Sir,

You have broad thinking, keep it up!

ஜனகன் ஞானேந்திரன் said...

புல்லட் பாண்டி என்பவருடைய பதிவிலிருந்து சிறு துண்டு திசைமாற்றப்பட்ட சிந்தனைக்கும், எதிரிகளான மேற்கையும் இந்தியாவையுமே சீனப்பூச்சாண்டியினூடு நல்லபிள்ளைகளாக்கும் பிரசாரத்தில் எடுபட்டுப்போன தன்மையையும் இது காட்டுகிறது:

http://ariyalion.blogspot.com/2009/05/blog-post_22.html

//மேற்கத்திய நாடுகளுக்கு எல்லாம் நம்மாளு குடுத்தான் பாரு குடுவை …. அதிலும் சுவிஸ்சுகாரனுக்கு பண்ண காமெடி உலகமகா காமெடி… ஐநா அது இதுன்னு எல்லாரும் தங்களால முடிஞ்ச வரைக்கும் முக்கிப் பாத்தாங்க ம்ஹ_ம்… “நல்லா கதலி வாழைப்பழம் சாப்பிடுங்க ”ன்னு நம்ம சால்வை சொன்ன அட்வைச கேட்டுக்கொண்டுபோய் பனியில வாழைமரம் நட்டுக்கிட்டிருக்காங்க கேனப்பயலுக…


எப்பிடி வந்துச்சு இந்த தைரியம்? காரணம் நான் சொல்ல தேவையில்ல…


சீனாக்காரன்…

குடும்பம் குட்டிய கவனிக்காம ஒரு நாளில 18 மணிநேரம் வேலை செய்யிற பேய்ப்பிறப்பு… அவனுக்கு மனிதம் நீதி நேர்மை நியாயம் எல்லாம் அந்த பூந்தல் கண்ணுக்கால பாத்தா தெரியவா போகுது…
ப்ளான் பண்ணிட்டான்.. “மவனே இந்தியா! வைக்கிறண்டி ஆப்பு உன்ட கவட்டுக்கயிருந்து” எண்டு … அவன்ட கஸ்மாலப்பிளானுக்க நம்ம போராட்டம் மாட்டி இப்பிடியாப்போச்சு… சே!

ரஸ்யாக்காரனுக்கு பழைய கொதி…மேற்கத்திய காரன் வச்ச வெடியில வீக்கம் இன்னும் வத்தேல்ல… அதுக்குள்ள அவண்ட நிலம சரியில்ல எண்டு தெரிஞ்சவுடன மறுபடியும் சறத்த தூக்கிறார்…


இந்தியாதான் பாவம்… என்ன செய்யிறதெண்டு தெரியாம முழிக்குது… சுத்தி நிக்கிறாங்க… இலங்கைய பகைச்சுக்கவுமு; முடியாம வெளிப்படையா ஆதரவளிக்கவும் முடியுhம அதுக்கு மூல வியாதியே வந்திருக்கும் இத்தரைக்கும்.. நேற்று சனல்ஏசியா நியுசில கூட்டமா மேசயப்போட்டிருந்து குழறி அழுகினை…பாவமாக்கிடந்துது…. நல்லா வேணும்….


ஆனாலும் சீனாவும் ரசியாவும் ஒரு குறித்தளவுக்குதான் சப்போட் தரமுடியும்… ஐநாவில நல்ல காரணங்கள மேலைத்தேயம் காட்டிச்சுதெண்டால் அவையால ஒண்டும் செய்ய முடியாது… ஆகவே ஏதாவது இலங்கை தமிழருக்கு ஏதாவது குடுக்க வேண்டிய அவசியமிருக்கு…//

ஜனகன் ஞானேந்திரன் said...

"இந்திய அதிகாரவர்க்கமும்" "றோ" வும் பரப்ப முயலும் கருத்துக்களைப் பரப்பி உதவுகிறார் வீரமணி:

http://thamizhoviya.blogspot.com/2009/05/blog-post_9058.html

மு. மயூரன் said...

ஜனகன்,

உங்களுடைய கருத்துக்களுக்கு எனது ஆதரவு.

நீங்கள் பட்டியலிட்டிருக்கும் 9 புள்ளியையும் விரித்தெழுதவேண்டியுள்ளது.

முத்துக்குமாரன் நண்பர்கள் வெளியிட்ட புத்தகம் மீதான இதே மாதிரியான சந்தேகம் அதனை வாசித்தவுடனேயே எனக்கும் எழுந்தது. வலைப்பதிவிடல் சாத்தியமில்லாத சூழல். உடனடியாக tweet பண்ணியிருந்தேன்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

ஜனகன்,
பரந்துப்பட்ட அரசியற்பார்வைக்கு வாழ்த்துகளும், நன்றியும்.

S said...

could you please kindly elaborate on each of the 9 items you have listed. I am of the war generation and I am now as to what my politcal stace should be.

your article would help me and no doubt many other.
thanks,
S.

Post a Comment