5/28/2009

பாடல்: பாற்சோறு, றபான், விசில், கொடி

முதலில் இந்த வீடியோவைப் பாருங்கள்


ஏலேலோ ஹெல ஏலேலோ
ஏலேலோ ஹெல ஏலேலோ
ஏலேலோ ஹெல ஏலேலோ ஹெல
ஏலேலோ ஹெல ஏலேலோ

பாற்சோறு பொங்கு பாற்சோறு
பொங்கிப்படைக்கணும் பாற்சோறு
பாட்டோடு நடு ரோட்டினில் மங்கல
றபா-ன் அடித்துக் கூத்தாடு

நாடு விடுதலை ஆச்சுதடா
நாறிப் புலி செத்துப்போச்சுதடா
நாடு நமதென்று மற்ற இனங்கட்கு
நல்லா உறைக்கக் கூத்தாடு

கொடிகள் அசைத்துக் கூத்தாடு
கூக்குரலிட்டுக் குதித்தாடு
வெடிகள் வெடித்துக் கூத்தாடு - மது
வெறியில் மிதந்து கூத்தாடு

ஹிந்திப் படத்துக்கு விசிலடி
கிரிக்கட் மட்சுக்கும் விசிலடி
வந்த அரசியல் வாதிகள் மேடையில்
விசுக்கும் பொய்யுக்கும் விசிலடி

உலகக் கோப்பைக்குக் கொடிபுடி
அழகிப் போட்டிக்கும் கொடிபுடி
புலியழிஞ்ச commentary கேட்டிட்டு
அதுக்கும் தேசியக் கொடிபுடி

இண்டைக்குச் செய்திகள் சொல்லாது
எப்பவும் பேப்பரில் வாராது
குண்டினில் சிதைந்த படைச் சவங்களைக்
கண்ணிலும் TVகள் காட்டாது

சண்டைகள் வீடியோ gameஆடா?
சிதைந்து சாவது நோகாதா?
மண்டைகள் சிதறிக் கண்ணொன்று கிழிந்து
முண்டங்கள் ஆவது நீயாடா?

செத்த படையினன் வீட்டினிலே
சோகம் வெடித்து அழுகையிலே
சத்தமாய் வீரம் தியாகம் எனக்குதி
சவத்தில் ஏறிச் சிரித்துக்கொண்டே

கொலைக்கருவிகள் விற்றது யார்?
கொள்ளைகொள்ளையாகச் செத்ததுயார்?
நிதியுதவிகள் செய்ததுயார் இங்கு
நிணத்தில் புழுத்துப் புதைந்ததார்?

இந்தியா எங்கட நண்பனடா
ஈரான் சீனமும் நண்பரடா
அந்தப்பக்கத்திலே நின்றபடியந்த
அமெரிக்காவும் நண்பனடா

இத்தனை பேர்களும் உதவினார்
ஆயுதம் படைகள் அனுப்பினார்
அத்தனை செலவில் போட்ட முதலுக்கு
எதனை லாபமாய்ப் பிடுங்கினார்?

உலக வங்கியை உதறினார்
அமெரிக்காவை அதட்டினார்
ஹெல சரித்திர ராச பரம்பரை
எவர்க்கும் எதுக்கும் பயப்படார்

துறைமுகங்களில் நிற்பதுயார்?
கனிய வளங்கள் பெற்றது யார்?
விரைந்து அந்நிய மூலதனம் வந்து
வளைத்துப்போட்டிட விட்டதுயார்?

போர்க்கள வெற்றியின் புகையினால்
தேசத்தின் கண்களை மூடியதார்?
பார்வையிழந்த நம் தேசத்தைக் கூறிட்டுப்
பேரரசுக்கெலாம் விற்றது யார்?

வல்ல அரசுகள் நலனெல்லாம்
சொல்லிவைத்தபடி நாட்டிலே
நல்லபடி நிறைவேற்றி முடிப்பது
கொல்லப்பட்ட புலிக்கூட்டமா?

கேள்விகள் முளைக்கும் காற்றோடு
கேட்டால் போச்சுது நம்பாடு
கேள்விகள் கேட்டிடும் வாய்களையடைத்து
கொட்டித்திணிக்கணும் பாற்சோறு

பாற்சோறு பொங்கு பாற்சோறு
பொங்கிப்படைக்கணும் பாற்சோறு
பாட்டோடு நடு ரோட்டினில் மங்கல
றபா-ன் அடித்துக் கூத்தாடு

ஏலேலோ ஹெல ஏலேலோ
ஏலேலோ ஹெல ஏலேலோ
ஏலேலோ ஹெல ஏலேலோ ஹெல
ஏலேலோ ஹெல ஏலேலோ


[பெயர் வெளியிட விரும்பாத தோழமை வலைப்பதிவர் இப்பாடலை எழுதி "இது எவருக்கும் சொந்தமானது. அவரவர் விருப்பப்படி மெட்டுப்போட்டு வாய்விட்டுப்பாடுங்கள்" எனக் குறிப்பிட்டு அனுப்பி வைத்திருந்தார். பாடல் எனக்கும் பிடித்திருந்ததால் இங்கே பிரசுரிக்கிறேன்]

5/22/2009

ஈழத்தின் அரசியல் எழுச்சியை தட்டித் தடவி தமக்கேற்றபடித் திருப்பும் அதிகாரங்களின் கலை

கச்சிதமாய்த் திட்டமிட்டு, கால அட்டவணை பிசகாமல், நேர்த்தியாகவும் சிறப்பாகவும் புலிகளைத் தோற்கடித்து அழித்து முடித்துள்ளார்கள்.

அழித்து முடித்தவர்கள் யார்?

மாற்றுக்கருத்தாளர்களா?
சிறீலங்கா அரசா?
இந்தியாவா?
சீனாவா?

யார் அழித்தவர்கள்?

இலங்கையிலும் உலகத்திலும் எவருடைய நலன்களுக்கு எல்லாம் புலிகள் தடையாக அமைந்தார்களோ , அந்த அத்தனை அதிகாரம் படைத்த சக்திகளும் ஓரணியில் சேர்ந்துதான் இந்த அழித்தொழிப்பை நடத்தியிருக்கிறார்கள்.

புலிகளுக்குச் சார்பாக எந்தச்சக்திகளும் இல்லாமற்போனது புலிகளின் இயல்பு, இன்றைய உலக அரசியற் சூழல் போன்றவை வழிவந்த துரதிஷ்டம். முன்பெல்லாம் இந்தியா போன்ற சக்திகள் புலிகளை ஆதரித்து தமது கைப்பாவையாக நடத்தியுள்ளன. பிறகு இக்கட்டான முட்டுச்சந்துகளுக்குள்ளிருந்து வெவ்வேறு சக்திகள் புலிகளைக் காப்பாற்றி விட்டிருந்தன. ஆனால் இந்தமுறை அப்படி எதுவும் நடக்காமற்போய்விட்டது.

ஏன் அப்படி நடக்காமற்போனதென்று தகவலாழம் மிக்க ஆய்வாளர்கள் ஆய்ந்து சொல்லட்டும்.

இந்த அழித்தொழிப்பில் அநியாயமாய், இரண்டுதரப்பாலும் "பயன்படுத்தப்பட்டு" கொத்துக்கொத்தாகச் சாகவிடப்பட்டவர்கள் வன்னிச்சனங்களே.

இந்த நிகழ்காலத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஈழத்தமிழர் ஆதரவு சக்திகளுக்கும் அவரவர் மனங்களில் இருந்த ஆலமரமொன்று அதிரவிழுந்திருக்கிறது.

இது ஈழத்தமிழ்ச்சக்திகளை அரசியல் ரீதியாக எழுச்சிகொள்ளச்செய்திருக்கிறது. அரசியலுணர்வு பெறத் தூண்டியிருக்கிறது.

அரசியல் அக்கறை அற்றவர்களைக் கூடச் செய்திகளைத்தேடவும், வீதிக்கு இறங்கவும், அரசியல் பேசவும், அரசியலில் ஈடுபாடு காட்டவும் தள்ளியிருக்கிறது.

அவலத்தின் கண்ணீரில், அழிவின் அதிர்ச்சியில் விளைந்த ஓர் ஆக்கம் இது. இது எல்லா நேரமும் நடந்து விட முடியாத ஒரு நல்ல விசயம்.

இந்த அரசியல் எழுச்சி ஈழ மண்ணில் மனங்களில் குமுறிக்கொண்டு, தமிழகத்தில் கண்ணீரையும் கோபத்தையும் கனன்றுகொண்டு, புகலிடமெங்கும் வீதிகளை நிறைத்துக்கொண்டு வெள்ளமாய் கரைபுரண்டு பொங்கிப்பாய்கிறது.

இது வல்லரசுகளுக்கும், நயவஞ்சக அதிகரங்களுக்கும் சிக்கலான நிலமையே.

மக்கள் அரசியலறிவு பெறக்கூடாது என்பதிலும், மக்களை அரசியல் நீக்கம் பெற்றவர்களாக, சினிமாவையும் கிரிக்கட்டையும் தேர்தல் போட்டிகள் பற்றிய செய்திகளையும் மட்டுமே கதைப்பவர்களாக வைத்திருக்க வேண்டும் என்பதிலும், தாம் நினைப்பதுபடியெல்லாம் மக்கள் ஆடவேண்டும் என்பதிலும், தாம் கொறிக்கக்கொடுப்பதையே மக்கள் தமது அரசியலாக கடித்துத்திரியவேண்டும் என்பதிலும் கண்ணில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு கவனமாக இருக்கும் அதிகாரங்களுக்கு இந்த எழுச்சி நிச்சயமாக அச்சுறுத்தலானதே.

ஆனால்,

நாங்கள் நினைப்பதை விட அதிகாரங்களும், வல்லரசுகளும் சக்தி வாய்ந்தவை. அறிவு மிக்கவை. தமக்கிடையே கச்சிதமாகக் கூடிப்பணியற்றக்கூடியவை. நினைத்துப்பார்க்கமுடியாத வேகம் கொண்டவை.

புலிகளின் அழிவில், அந்த அதிகாரங்களின் வேகத்தையும் விவேகத்தையும் கூட்டுழைப்பையும், தூரநோக்கையும் நாங்கள் கொஞ்சமாவது பார்த்தறியமுடியும்.

அதிகாரங்களை எவ்வளவுக்கெவ்வளவு நாம் குறைத்து மட்டுக்கட்டுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நாம் அவற்றினிடத்தில் தோற்றழிந்து போவோம்.


எமதிந்த அரசியல் கொதிப்பையும் எழுச்சியையும் எதிர்கொள்ளவும் கையாளவும் தோற்கடிக்கவும் தொலைத்துவிடவும் அதிகாரங்கள் எப்பவோ வழிவகைகளைக் கண்டறிந்துவிட்டன என்பதை மட்டும் நன்றாக நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.

எம்மைத்தோற்கடிப்பதற்கான அதிகாரத்தின் ஒவ்வொரு அசைவையும் மிக நுணுக்கமாக நாம் அவதானித்து அம்பலப்படுத்த வேண்டும். இதற்கு கண்ணிரண்டும் செவியும் அகலத்திறந்த அவதானம் தேவை, கூர்மதியோடு பகுத்தாராயும் நுண்ணறிவு தேவை. இது ஆய்வாளர்களுக்கும் புலமையாளர்களுக்கும், அரசியல் அவதானிகளுக்கும் முன்னால் வந்து சேர்ந்திருக்கும் மாபெரும் களப்பணி.


என்னுடைய சிற்றறிவுக்கெட்டிய வரை அதிகாரங்களின் உத்தி ஒன்றினை உங்களுடன் பகிர நினைத்தே இப்பதிவினை எழுதுகிறேன்.

ஜூடோ என்றொரு தற்காப்புக்கலை இருக்கிறது. அதன் அடிப்படை, தாக்கவரும் எதிரியின் வேகத்தையும், சக்தியையும், தாக்குதல் வல்லமையையும் கொண்டே அவ்வெதிரியை வீழ்த்திவிடுவது என்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதாவது எவ்வளவு சக்தியோடு நீங்கள் தாக்கப்போனீர்களோ, அந்தச்சக்தி திசைமாற்றப்படுவதன்மூலம், அதே சக்தியின் விளைவாகவே நீங்கள் தாக்கப்படுவீர்கள். உங்கள் எதிரிக்கு எந்த இழப்பும் இல்லை. மெல்லத்தட்டி உங்கள் சக்தியை உங்களுக்கெதிராக திருப்பி விட்டது மட்டுமே அவர் வேலை.

இதே உத்தியை எமது அரசியல் எழுச்சியை நோக்கியும் அதிகாரங்கள் பயன்படுத்தத்தொடங்கிவிட்டன என்பது வெட்ட வெளிச்சமாகத்தெரிய ஆரம்பிக்கிறது.
(முன்னரும் இதையேதான் செய்தன. அதுபற்றி வேறெப்போதாவது பேசலாம்)

தம்மை நோக்கிக்குரைக்கும் நாயை நிலவை நோக்கியும் மரத்தை நோக்கியும் நிழலை நோக்கியும் குரைக்க வைத்துவிட்டால் இப்போதைக்குப் போதுமானதே.

நம்மில் பலர் நிலவைப்பார்த்தும், மரத்தைப்பார்த்தும், நிழலைப்பார்த்தும் குரைக்க ஆரம்பித்துவிட்டோம்.

இவ்வாறாக திசைமாற்றப்பட்ட போர்க்கொதிப்பிற்கு எடுத்துக்காட்டாக நானறிந்த சம்பவங்களைத் தருகிறேன்:


1. தமிழர்கள் "சிங்கள வெறியர்களாலும்" மகிந்த சகோதரர்களாலும் கொல்லப்படுவதாக எமது அரசியற்பார்வை குறுக்கப்பட்டு ஏகாதிபத்தியங்களிடம் முறையிடுபவர்களாக நாம் மாற்றப்பட்டமை.

2. இந்திய காங்கிரஸ் அரசாங்கமே இதற்குக்காரணம் என்றும், சோனியாவின் காழ்ப்புணர்வே இங்கே வெறியாடுகிறதென்றும் நம்பவைக்கப்பட்டமை.

3. கருணாநிதி துரோகம் செய்யாதிருந்தால் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்று அங்கலாய்த்தமை.

4. இதன்வழி ஜெயலலிதாவையும், BJP ஐயும் ஆதரிக்கும் நிலைக்கு நயவஞ்சகமாக தள்ளப்பட்டமை.

5. மேற்கு நாடுகளின் அரசாங்கங்களிடம் கையேந்தி அவற்றுக்கு சிறீலங்காவின் "படுகொலைகளை" படம் காட்டி மாற்றங்களை உருவாக்கலாம் என்று நம்பவைக்கப்பட்டமை.

6. பாரிய மக்கள் எழுச்சியை, புலிகளைக் காப்பதற்கான, பிரபாகரனை வழிபடுவதற்கான போராட்டமாகக்குறுக்கி திசைமாற்றியமை.

7. முத்துக்குமாரன் நண்பர்கள் அமைப்புப் போன்றவற்றால் புத்திசாலித்தனமாக ஏமாற்றப்பட்டு, சீனப்பூச்சாண்டியை அளவுக்கதிகமாக நம்பி, இந்திய உளவுத்துறையை அறியாமல் தவறு செய்யும் பிள்ளையாகவும் சோனியாவை தவறான வழிகாட்டும் அம்மாவாகவும் நம்பி, காங்கிரசை அகற்றினால் எல்லாம் சரி என்றவாறாக நினைத்து இந்திய நலன்களுக்குச் சார்பாக கோசமிடவைக்கப்பட்டமை.

8. ஐ நா வில் சீனாவும் ரஷ்யாவும் எதிராய் இருப்பதால் தான் அமெரிக்க பிரிட்டன் கொண்டுவர நினைக்கும் "தீர்ப்புநாள்" கைதவறிப்போவதாய் நினைத்துக்கொள்கின்றமை. இதில் மேற்குக்குச்சார்பான ஜப்பான் ஏன் மேற்குக்கு எதிர்நிலை எடுக்கிறது என்று சிந்திக்க மறுகின்றமை.

9. எதுவும் செய்ய வழியில்லாத முட்டுச்சந்தில் முடக்கபப்ட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை வேகமாக வடிவமைக்க வேண்டிய நேரத்தில் பிரபாகரன் செத்திட்டானா தப்பிட்டனா எனும் அங்கலாய்ப்பிலேயே காலம் கடத்துகின்றமை.



இன்னும் நீளும் இந்தப்பட்டியலின் ஒவ்வொரு சம்பவமும் ஏகாதிபத்திய உளவு நிறுவனங்களாலும், இந்தியா உள்ளிட்ட வல்லரசுகளின் கூலிகளாலும், இலங்கை அரசாலும், புலிகளாலுமே நடத்திவைக்கப்பட்டன.

இனியும் எமது எழுச்சி இதே சக்திகளால் நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் திசைமாற்றப்பட்டவண்ணமே இருக்கும்.


நாம் என்னதான் செய்யமுடியும்?

களப்பணிகளுடன் புலமை உழைப்பு மிக மிக அவசரமாய்த் தேவைப்படுகிறது.

சதிகளை கண்டுபிடிக்கவும், மாயவலைகளை அறுக்கும் அறிவுக்கூர்மையை தீட்டிவைத்துக்கொள்ளவும் நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

எமக்கு முன்னால் இப்போது இலக்கற்ற சூனியம் விரிந்திருக்கிறது. காலடி எடுத்து வைக்க முடியாதபடி எமது இருண்டபாதைகள் எங்கும் சுற்றிவரக் கண்ணிவெடிகள். அரசியற் பொறிகள்.
திசையறியோம், வகையறியோம், நினைத்துப்பார்க்கமுடியாத பிரமாண்டங்களாக எதிரிப்பிசாசுகள் சூழ்ந்து விட்ட இருண்ட நிலை இது.

கூர்மதியோடும், நேர்மையோடும் சதிவலைகளை மெல்ல மெல்ல அவிழ்த்து எமக்கான பாதையைக் கண்டறிய வேண்டிய நேரம் இது.

இவற்றை உணர்ந்து எங்கள் எழுச்சியைத் தட்டித்தடவி எமக்கெதிராக மாற்றும்; எங்கள் வீரியத்தை வீணான கவனங்களில் சிதறடிக்கும் முயற்சிகளுக்கு இடம் கொடாதிருப்போம்.

5/18/2009

புலி சாகும் அலுவலக நாளொன்றில் News alert கள் வருகின்றன

ஒவ்வொரு செல்பேசிச் செய்திச்சிணுங்களைஅடுத்தும் கொட்டுகிறது கைதட்டல் மழை
சிரிப்பின் இடி
எம்மீது விழும் ஓரப்பார்வையின் குரூரமின்னல்

மின்னஞ்சல்களாகவும் Instant Messenger களின் ஒற்றை வரிகளூடாகவும் நண்பர்கள் கண்ணீர் தெறிக்கிறது.

செல்பேசிகளின், இணையத்தொடர்புகளின் முகவரிப்புத்தகங்களில் தமிழ்ப்பெயர்களைத்தேடி அலைகிறது
வெடிக்காமல் பொத்திவச்ச விம்மும் மனசு.

ஒட்டுக்கேட்கப்படக்கூடிய தொலைப்பேச்சுக்களின்
திக்கித்திணறிய குறியீட்டு வார்த்தைகளாயும் இடைவெளிகளாயும்
வெடித்து உடைந்து நொறுங்கிச்சரிகின்றது.

அலுவலகத்தின் பெரும்பான்மை ஆர்ப்பரிக்கிறது.


இல்லாத வேலைகளை எல்லாம் எடுத்துப்போட்டு "பிசி"யாகிக்கொள்ளும் நண்பர்களின் கண்கள்
இதன்வழி புகுந்து நரகத்திற்காவது தப்பிவிடலாமா என்று கணினித்திரைகளை வெறித்தபடிப் பார்க்கின்றன.

கண்ணீர்ச்சுரப்பிகள் இறுகி இறுகி கண்ணீரை அடக்கும்
முகத்தசைகள் முறுகி இறுகி அழுகையை அடக்கும்
இதயமும் உடலும் நரம்புகளும் குறுகிக் குறுகி
குறுகிக் குறுகிக்
கூசித் தளரும்

மூளை சுடரும்
சுடரும்


புன்னகைப்பதை விட கடினமான செயல் இந்த உலகில் வேறென்ன இருக்க முடியும்?

கொடி கட்டவும் பாற்சோறு பொங்கவும் காசுகேட்கும் முகங்களிலும் கரங்களிலும் வார்தைகளிலும் குழைவிலும் "எங்களை விடுவித்த" உங்கள் வெற்றிச் சிரிப்பிலும்
நான் என்னை "உங்களிடமிருந்து" விடுவித்து பிரித்தெடுத்து தனித்துப்போகிறேன்.
முகவரிப்புத்தகங்களில் தமிழ்ப்பெயர்களைத் தேடுகிறேன்.

விறைத்து எழுந்து வீசி ஆடும் உங்கள் சிங்கக்கொடி,
இன்று நான் உங்கள் முன் உரத்துப் பேச வேண்டிய வார்த்தைகளின்
உரப்பினைப் பீரங்கிகள் கொண்டும்,
சொற்களை குதத்தினுள் புகும் முள்ளுக்கம்பிகளைக்கொண்டும்,
குரலினை என் சனத்தைக்கொன்றும்
பிடுங்கிக்கொண்டது.

இப்போது அந்தக்கொடியின் நகல்களை அசையாதிருக்கும் என்முன்னே வீசி ஆட்டுகிறீர்கள்..
விசிலடித்து ஆடுகிறீர்கள்..


செத்துப்போன புலி ஒரு நீண்ட வார இறுதி விடுமுறையாய்ப்பார்த்து செத்திருக்கலாம்.

5/17/2009

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல..

இன்று மே 17. ஒரு ஞாயிற்றுக்கிழமை.

ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டத்தில் மற்றுமொரு குறித்துவைக்கவேண்டிய நாள்.

விடுதலைப்புலிகளை ஆதரித்துவந்தவர்களுக்கோ வரலாற்றில் மறக்கவே முடியாத நாள்.

இலங்கையின் அரசியல் போக்குகளை உன்னிப்பாக அவதானித்து வருபவர்களுக்கு அவ்வரசியற்போக்குக்கள் புதிய பரிணாமமொன்றினை வெளிப்படையாகவே எடுக்கவிருக்கும் காலத்துக்கான கதவாக அமையும் நாள்.

ஐந்தாறு ஆண்டுகளாய் இணையத்தின் அரசியல் எழுத்துப்போக்கின் வாசகனாக இருந்த நான் இனித் தனி வலைப்பதிவொன்றை ஆரம்பித்து எழுதவே வேண்டும் என்ற முடிவுக்கு வந்து முதல் பதிவை இடும் நாள்.

இணையத்தமிழ்க் குடிமக்களுக்கு வணக்கம்.



இந்த நாள் கரிநாளாயிருக்கலாம்; புனிதநாளாய்ப்போகலாம்; இலங்கையின் இரண்டாவது சுதந்திர நன்னாளாகலாம்; பிரபாகரன் இறந்த நாளாகலாம்; இல்லாமலும் போகலாம்; மங்கலமற்ற நாளாக அமையலாம்; கொழும்பில் பாற்சோறு கொடுத்துக் கொண்டாடும் பண்டிகையாகலாம்; எதிர்பார்ப்புக்கள்தரலாம்; கனவுகளை கொல்லலாம்; கனவுகளைக் கலைத்தும் விடலாம்.

இன்று நான் எழுதத்தொடங்குகிறேன்.

இந்த நாள் நல்ல நல்ல, அது நல்ல நல்ல

5/16/2009

சோதனை

வலைப்பதிவொன்றை உருவாக்கும் எனதிந்த முதல் முயற்சியில் தொழிநுட்ப ரீதியில் உதவி வலைப்பதிவையும் வடிவமைப்பையும் செய்துதந்த எனதினிய நண்பிக்கு நன்றி.

இது சோதனைப்பதிவு. முதற்பதிவல்ல ;)


தமிழ்மணத்தில் சேர்க்கணும், திரட்டிகளுக்கு போகணும்...
ங்ஙே....

பார்க்கலாம்.